Lovely Friends Sangam

Together We Care, Together We Serve, Together We Build a Better Tomorrow.

நம்பிக்கையை ஊட்டுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுதல்

லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம்

லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம் (Lovely Friends Sangam) – முழு வரலாறு மற்றும் செயல்பாடுகள் ஆரம்பத்தில், நாங்கள் நண்பர்களாகச் சேர்ந்து சுற்றுலா செல்வதும், மகிழ்ச்சியாய் இருப்பதுமாய் இருந்தோம். எங்களுடைய மகிழ்ச்சி எங்களைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டுமே சிறிய அளவில் இருந்தது. அந்த நேரத்தில், சென்னையில் பெரிய அளவில் மழை பெய்து, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. துயரப்படும் அந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அதற்காக, எங்களுடைய ஒரு நாள் சம்பளத்தையும், மேலும் எங்கள் பகுதி மக்களிடமிருந்து திரட்டிய நிதியையும் சேர்த்து ஒரு கணிசமான தொகையை சென்னை நிவாரணத்திற்காக அனுப்பி வைத்தோம். அங்கு ஒரு குழுவாக அவர்கள் செயல்படுவதைப் பார்த்து, நாங்கள் மூன்று பேரும் வாலண்டியர்ஸாக (Volunteers) அங்கு போயிருந்தோம். "நம்மளும் இதே மாதிரி ஒரு பேரிடர் காலம் அல்லது மாணவர்களுக்கு உதவி செய்யணும்" என்ற எண்ணத்தோடு, இதே மாதிரி ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் முதலில் 'சொசைட்டி' (Society) என்பதாக, சங்கமாகத் தொடங்கினோம். அப்படித்தான், சுப்பிரமணியபுரம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு, அரசு பதிவு எண்: 07/2016-ன் கீழ் "லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம்" அதிகாரப்பூர்வமாக உதயமானது. *சங்கத்தின் வளர்ச்சியும் நிதிப் பங்களிப்பும்:*

தொடக்கக் கட்டத்தில், இந்தச் சங்கத்தில் மொத்தம் 14 நண்பர்கள் இணைந்தோம். மாதச் சந்தா என்ற முறையில் தலா ₹50 எடுத்துச் சேர்த்து எங்களுடைய பணிகளைத் தொடங்கினோம். அதன் பின்பு, சங்கத்தின் செயல்பாடுகள் விரிவடைந்ததைத் தொடர்ந்து இப்போது மாதச் சந்தாவாக ₹100 எடுத்துக் கொண்டு நிறைய நற்பணிகளைச் செய்து வருகிறோம். எங்களுக்குப் பல வழிகளிலும் சப்போர்ட்டர்கள் (Supporters) நிறைய பேர் இருக்கிறார்கள். எங்களது நண்பர்கள் பலர் வெளியூர்களில் இருந்தாலும், சங்கத்தின் சார்பில் ஏதேனும் நிகழ்ச்சிகள் அல்லது பங்க்ஷன்கள் நடக்கும் போது, அவர்களால் முடிந்த தொகையாக ₹1000 வரை கொடுத்து தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். *முக்கிய செயல்பாடுகள் மற்றும் நோக்கம்:*

எங்கள் சங்கத்தின் முதன்மையான நோக்கம், மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவுவதுடன், அவர்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்க வேண்டும் என்பதுதான். இதற்காக, ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களையெல்லாம் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இந்த விழாக்களின் போது சிறப்பு அழைப்பாளர்களாகக் காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து தேசியக் கொடியை ஏற்றுகிறோம். அதன் பின்னர், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு சிறப்பான பேச்சைக் (Speech) கொடுத்து வருகிறோம். இவ்வாறு, நண்பர்களாய் இணைந்து ஒரு சிறிய அடிப்படையில் தொடங்கி, இன்று சமுதாயத்திற்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நிற்பதுதான் இந்த "லவ்லி ப்ரண்ட்ஸ் சங்கம்" ஆகும்.

அதன்பின்னர், எங்களது இப்பகுதியில் உள்ள மாணவர்கள் பலர் எவ்விதக் கட்டுப்பாடும், முறையான நெறிமுறைகளும் இன்றி வளர்ந்து வந்தனர். எங்களுக்கும் அப்படித்தான், நல்வழிப்படுத்த (வழிகாட்ட) யாரும் இருக்கவில்லை. இத்தகையதொரு சூழலில், அம்மாணவர்களுக்கு நாம் ஒரு நல்லதொரு தளத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி, அவர்களுக்காகக் 'கபடி' விளையாட்டைத் தொடங்கினோம். அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால் நன்மையாக இருக்கும் எனக் கருதி கபடியைத் தொடங்கி, அதனை மாணவர்களிடையே கொண்டு சேர்த்தோம். அக்கபடியில், மாணவர்கள் உடற்பயிற்சிகளை (Warm-up) எவ்வாறு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல நுணுக்கங்களை, நாங்களே ஒரு பயிற்சியாளரை (Master) அழைத்து, அவருக்குச் ஊதியம் (சம்பளம்) வழங்கி, மாணவர்களுக்கு இலவசமாகவே கற்றுக் கொடுத்தோம்."

சிலம்பம் – தமிழர்களின் பாரம்பரியக் கலை :

அப்புறம், சிலம்பம் என்பது நம்ம தமிழர்களின் பாரம்பரியக் கலை. அதையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை கொண்டு வந்தோம். அதில் மாணவர்களும் மாணவிகளும் ஆர்வமாக கலந்து கொண்டு சிலம்பத்தை கற்றுக்கொண்டார்கள்.
எங்கள் பகுதியில் சிலம்பம் கற்றுக்கொடுக்க ஆசான் அல்லது மாஸ்டர் யாராவது இருக்கிறீர்களா, எங்கள் குழந்தைகளுக்கு வந்து சொல்லிக் கொடுக்கலாமா என்று பேஸ்புக்கில் பதிவிட்டோம். அந்தப் பதிவை ஒரு நண்பர் பார்த்து, களக்காட்டில் இருந்து ஒரு மாஸ்டரை அறிமுகப்படுத்தினார். அவர் வந்து எங்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்தார்.
தற்போது பெரிய அளவில் சிலம்பப் பயிற்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறோம். இப்படி ஒவ்வொரு செயலையும் செய்யும்போது மனதிற்கு திருப்தியாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

மாணவர்களுக்கான இலவச ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் :

சொசைட்டியை ஆரம்பித்த பிறகு எங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையும் தெளிவும் உருவானது. அதன் பிறகு பல்வேறு செயல்பாடுகளை செய்து முடித்தோம். மாணவர்களுக்காக ஆங்கில சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில், மே மாத கோடை விடுமுறையில் மாணவர்களை வீணாக நேரம் கழிக்க விடாமல், தினமும் இரண்டு மணி நேரம் இலக்கணம் (Grammar) மற்றும் பேச்சு ஆங்கிலம் (Spoken English) கற்பிக்கலாம் என்று முடிவு செய்தோம். அதன்படி அந்த வகுப்புகளை நடத்த ஆரம்பித்தோம்.
அந்த வகுப்புகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் அமைப்பின் பெண் உறுப்பினர்களும் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்தனர். அவர்களும் ஆசிரியர்களாக இருப்பதால், தினமும் இரண்டு மணி நேரம் தங்களின் ஆதரவை வழங்கி, மாணவர்களுக்காக இலவச வகுப்புகளை நடத்தினர்.
அந்த இலவச வகுப்புகள் இன்றுவரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் இணைந்து செயல்படுவது எங்களுக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் எங்கள் முயற்சி :

எங்களின் ஒவ்வொரு செயல்பாடும் மாணவர்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைந்தது. அவர்களுக்காக பல்வேறு பயனுள்ள செயல்களை மேற்கொள்ள ஆரம்பித்தோம். மாணவர்களின் பெற்றோர்களும், குழந்தைகள் நன்றாக விளையாடி, சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருப்பதாக பாராட்டினர். இதனை அடிப்படையாகக் கொண்டு, எங்கள் லவ்லி பிரண்ட்ஸ் அறக்கட்டளை சங்கத்தின் நோக்கமாக “சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் எங்கள் முயற்சி” என்ற தலைப்பை உருவாக்கினோம். அந்த நோக்கத்தின் கீழ், ஒவ்வொரு செயல்பாடும் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

*மாணவர்களின் வளர்ச்சிக்கான எங்கள் முயற்சிகள்*

ஆரம்பத்தில், மாணவர்களின் கல்விக்காக சிறு சிறு உதவிகளைச் செய்யத் தொடங்கினோம். பள்ளி திறக்கும் நேரங்களில் பள்ளிப் பைகள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கினோம். இதனால் கிடைத்த மகிழ்ச்சி, மேலும் பல உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. எங்கள் பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் இருந்தனர். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற உணர்வு எங்களுக்குள் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நூலகம் அமைத்தல், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துதல் மற்றும் அவர்கள் அரசு அதிகாரிகளாக உயர வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டோம். எங்களை நம்பி பல ஆதரவாளர்களும் நன்கொடையாளர்களும் உதவிக்கரம் நீட்டினர். அவர்களின் ஆதரவுடன், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தது.
விளையாட்டு வசதிகள் இல்லாத நிலையில், தனியார் இடத்தை அனுமதி பெற்று சுத்தம் செய்து, மாணவர்கள் பயன்பெறும் வகையில் கபடி மற்றும் சிலம்பப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தினோம். இந்த முயற்சிகளே எங்களுக்கு மேலும் தன்னம்பிக்கையை அளித்து, மாணவர்களுக்காக இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தின.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின மருத்துவ முகாம்கள் :

அப்புறம், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் பொது மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம்.

அதன்படி, பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், பல் பரிசோதனைக்காக சிறப்பு பல் மருத்துவர் மூலம் தனிப்பட்ட சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்கான வசதிகளும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டன.

இவ்வாறு, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஒரு சிறப்பு முகாம் போன்று பல்வேறு மருத்துவ மற்றும் நலத்திட்ட சேவைகளை ஏற்பாடு செய்து, பொதுமக்களின் நலனுக்காக அவற்றை செயல்படுத்தினோம்.

*காவல்துறையின் ஒத்துழைப்பும் தன்னம்பிக்கையும்*

இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டு வந்தபோதுதான், காவல்துறையினருடன் நல்ல நட்பும் ஒத்துழைப்பும் உருவானது. அவர்களின் ஆதரவும் ஊக்கமும் கிடைத்ததால், பல்வேறு சமூகப் பணிகளை மேலும் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் மேற்கொள்ளத் தொடங்கினோம். இந்த ஒத்துழைப்பு, எங்கள் செயல்பாடுகளை இன்னும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.

*போட்டித் தேர்வு பயிற்சியும் நூலகம் உருவான பயணமும்*

காவல்துறையினருடன் ஏற்பட்ட நல்ல ஒத்துழைப்பின் மூலம், அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றிய திரு. சதீஷ்குமார் அவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. 2024 ஆம் ஆண்டில், அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்காக காவல்துறை பணிக்கான (பி.சி.) போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டது. அந்தப் பயிற்சி வகுப்பின் ஒருங்கிணைப்பு பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேவையான புத்தகங்கள், பயிற்சிகள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. டாப் அகாடமியுடன் இணைந்து 72 நாட்கள் தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்தப் பயிற்சியில் 95-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் 15 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று, இறுதியாக 7 மாணவர்கள் அனைத்து கட்டங்களையும் கடந்து அரசு பணியில் சேரும் வாய்ப்பைப் பெற்றனர். இது எங்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது.
அதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு நூலகத்தைத் தொடங்கும் முயற்சியை மேற்கொண்டோம். டாப் அகாடமி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு புத்தகங்களை வழங்கியது. மேலும், டிஎஸ்பி சதீஷ்குமார் அவர்களின் உதவியுடன் நண்பர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் மூலம் ஏராளமான புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. பல தரப்பினரின் பங்களிப்பால் கிடைத்த நூல்களை ஒன்றிணைத்து, மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு நூலகத்தைத் தொடங்கி செயல்படுத்தினோம்.

*வாராந்திர போட்டித் தேர்வு பயிற்சிகள்*

மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை போட்டித் தேர்வு மாதிரித் தேர்வுகளை நடத்தத் தொடங்கினோம். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 30 முதல் 40 மாணவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். எங்களிடம் பயிற்சி பெற்றவர்களும், டாப் அகாடமியின் உதவியுடனும் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு, முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த முயற்சி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு, எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளித்தது.

*பெரிய அளவிலான டிஎன்பிஎஸ்சி மாதிரித் தேர்வு*

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக பெரிய அளவில் ஒரு மாதிரித் தேர்வை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 170 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 200 மதிப்பெண்கள் அடிப்படையில் மாதிரித் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த முயற்சிக்கு விகாசஸ்ரீ அகாடமி பள்ளியின் ஆதரவு கிடைத்தது. அவர்களின் ஒத்துழைப்புடன் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மேலும், விகாசஸ்ரீ அகாடமி பள்ளியின் நிர்வாகிகள், பாவநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் பழனிகுமார் அவர்கள் மற்றும் அம்பை கலைக் கல்லூரியின் பேராசிரியர்கள் ஆகியோரை அழைத்து, தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கி, அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தினோம்.

*காவல்துறையின் ஆதரவால் உருவான பாய்ஸ் கிளப்*

எங்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி, அம்பாசமுத்திரம் டிஎஸ்பி திரு. சதீஷ்குமார் அவர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் திரு. மகேஷ்குமார் அவர்கள் இணைந்து எங்கள் பகுதிக்காக ஒரு *பாய்ஸ் கிளப்* அமைத்துக் கொடுத்தனர். பொதுவாக, பின்தங்கிய கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்களின் வளர்ச்சிக்காக இத்தகைய கிளப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதுபோல, எங்கள் பொத்தஸ்புதூர் பகுதியிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் இந்த வாய்ப்பு கிடைத்தது.

மாணவர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களான செஸ் போர்டு, கேரம் போர்டு, வாலிபால், கால்பந்து, டென்னிஸ் மட்டை உள்ளிட்ட பல பொருட்களை காவல்துறையினர் வழங்கினர். இதன் மூலம், எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுத்த முடிந்தது. குறிப்பாக, கைப்பேசி மற்றும் பிற தேவையற்ற பழக்கங்களில் இருந்து மாணவர்களை விலக்கி, அவர்களின் திறமைகளை வளர்க்கும் வாய்ப்பாக இது அமைந்தது.

இந்த முயற்சிக்கு முழு காரணமும் காவல்துறையின் ஆதரவும் ஊக்கமும் தான். அவர்கள் நேரடியாக எங்கள் பகுதிக்கு வந்து பாய்ஸ் கிளப்பைத் தொடங்கி வைத்து, அதன் நோக்கத்தை மக்களிடம் எடுத்துரைத்தனர். இன்று வரை அந்தக் கிளப் மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, வாலிபால் விளையாட்டில் மாணவர்களும் மாணவிகளும் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று, தற்போது போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு தங்களது திறமையை வளர்த்துள்ளனர். இதைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

*டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் விழா மற்றும் மாணவர் திறன் மேம்பாட்டுப் போட்டிகள்*

எங்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகவும், ஊக்கமளிக்கும் தலைவராகவும் திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அவருடைய பிறந்தநாளை மாணவர்கள் தினமாகக் கொண்டாடப்படும் நாளில், மாணவர்களுக்காக சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது.

அதன்படி, அவரது 93-வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஒருங்கிணைத்து, மாணவர்களுக்கான தடகளப் போட்டிகளை பெரிய அளவில் நடத்தினோம். இந்த நிகழ்விற்கு விகாசஸ்ரீ அகாடமி பள்ளி தனது விளையாட்டு மைதானத்தை வழங்கி முழு ஒத்துழைப்பையும் அளித்தது.

போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கும் பொறுப்பை *அருணா கார்டியா கேர்* நிறுவனம் ஏற்று ஆதரவளித்தது. மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை மாணவர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். விளையாட்டுப் போட்டிகளுடன் மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற அறிவுத்திறன் போட்டிகளையும் நடத்தி, சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவித்து வருகிறோம். இந்த நிகழ்வுகளில் அனைத்து பள்ளிகளின் மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, அதை ஒரு சிறப்பான மாணவர் விழாவாக மாற்றியுள்ளனர்.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கான எங்கள் நோக்கம்*

ஒவ்வொரு மாணவரும் மனதளவிலும், கல்வியிலும், விளையாட்டுத் திறனிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு சிறந்த சூழலை உருவாக்கியுள்ளோம். மாணவர்களுக்காக உட்புற விளையாட்டுகளான கேரம், செஸ் போன்ற வசதிகளும், வெளிப்புற விளையாட்டுகளுக்காக வாலிபால் உள்ளிட்ட வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான அனைத்து முக்கியமான புத்தகங்களும் எங்களிடம் உள்ளன. பலரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து கிடைத்து வருவதால், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பயனுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ள முடிகிறது.

*லவ்லி பிரண்ட்ஸ்* என்பது மாணவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் நல்ல பண்புகளை வளர்க்கும் நோக்கத்துடன் செயல்படும் ஒரு அமைப்பாகும். கற்க வேண்டும், விளையாட வேண்டும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எந்த மாணவராக இருந்தாலும், எங்களுடன் இணைந்து பயனடையலாம்.

மாணவர்கள் நல்ல பாதையில் வளர வேண்டும், தீய பழக்கங்களிலிருந்து விலகி சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். சிறந்த மாணவர்களே சிறந்த சமூகத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன், அனைவரும் இணைந்து ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என்ற உறுதியோடு செயல்பட்டு வருகிறோம்.

*மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக எங்களுடன் இணைந்து பயணிக்க அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.*

×